பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

175


கேட்பின் அல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் . . . .
...............................................................................
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே’ -புறம்:133:1-3,6-7

'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே!' - புறம்:134

‘பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்’ - புறம்:240:3

‘திண்தேர் இரவலர்க் கீத்த தண்தார்
அண்டிரன்’ - புறம்: 241:1-2

‘விருந்துஇறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையே ஞாயிறு
கொன்விளங் குதியால் விசும்பி னானே’ - புறம்:374:15-18

(ஞாயிறே! எங்கள் ஆய் போல நீ வள்ளண்மை உடையையோ வானில் வீணாக விளங்குகின்றாயே!)

7. நள்ளி : இவன் பெயர் கண்டீரக்கோப் பெருநள்ளி, கண்டீரக்கோப் பெருநற் கிள்ளி என இருவகையாக வழங்கப் பெற்றுள்ளது. இவன் தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலைநாட்டிற்கும் காட்டு நாட்டிற்கும் உரியவன். இவன் பெரும் கொடை வள்ளல். இவன் இரவலர்க்கு ஆண் யானைகளையும் பிற பொருள்களையும் வழங்கினான். இவன் பெண்டிரும் பெண்யானை (பிடி)களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இவன் வரலாறு விளக்கமாக இல்லை. இவனை வன்பரணரும் பெருந்தலைச் சாத்தனாரும் பாடியுள்ளனர்.

‘கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்குத் தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி . - சிறுபாணாற்:103-107