பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

39





அ-2 இல்லறவியல்
அ-2-16 பயனில சொல்லாமை 20
அதிகார முன்னுரை

‘பயனில சொல்லாமை' என்பது, சொல்லாலும், பொருளாலும், தனக்கோ, பிறர்க்கோ பயனில்லாதவற்றைக் கூறாமையாம்.

‘பயனில சொல்லுதல்' - வீணாகப் பேசுதல்.

‘பயனில சொல்லாமை' - வீணாகப் பேசாமை.

பயன்-பயத்தல், உதவுதல், உண்டாதல், தருதல், பெறுதல்.

பயன்-பயம்-பழம்-மரத்தின் பயன் பழம்.

‘விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்' - அகம்:12:8.

அதுபோல், ஒரு சொல்லாலும், பொருளாலும், செயலாலும் பயன் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து.

சொல் என்பதற்கு 'நெல்' என்று ஒரு பொருள் உண்டு. எனவே, சொல் என்பது நெல் போல் அரிசி அஃதாவது பொருள் உடையதாக இருத்தல் வேண்டும். அரிசி இல்லாத பதர் போல், பொருள் இல்லாமல் சொல் இருக்கக்கூடாது.

ஒருவர் தாம் ஒருநாள் முழுவதும் சொல்லுகின்ற அல்லது பேசுகின்ற செய்திகளில் பயனில்லாதவையே கூடுதலாக உள்ளன என்பது ஒரு பொது மதிப்பீடு.