பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

79



பொழிப்புரை: தம்மைப் பகைப்பவர்க்கும் தீயவற்றைச் செய்யாமல் விடுவது, எல்லாவகை அறிவினுள்ளும் தலையாய அறிவு என்று கூறுவர், அனைத்தும் அறிந்தோர்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) செறுவார்க்கும் தீய செய்யா விடல்:

தம்மைப் பகைப்பவர்க்கும் தீயவற்றைச் செய்யாமல் விடுவது.

- செறுவார் - பகைவர்

செய்யா - செய்யாது. ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

விடல் - விடுவது, விடுதல்

2) அறிவினுள் எல்லாம் தலை என்ப: எல்லாவகை அறிவினுள்ளும் தலையாய அறிவு என்று கூறுவர், அனைத்தும் அறிந்தோர்.

- அறிவினுள் எல்லாம் : ஒருவன் தன் வாழ்வியலுக்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவகை அறிவினுள்ளும்

- எல்லாவகை அறிவையும் அறிந்து, அவற்றுள்ளும் தலையாயதை அறிந்திருத்தலால் அவர் அனைத்தையும் அறிந்தவர் எனலாயிற்று.

- எல்லாவகை அறிவினுள்ளும், பகைவர்க்கும் தீயது செய்யாது விடலால் வரும் நன்மையும் அறிந்தவர் ஆயினார் என்னை?

‘திறனல்லல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று’ - 157

'செற்றார்க்கும் இன்னா செய்யாமை’ - 313

'நன்றின்பால் உய்ப்பது அறிவு’ - 422

‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்' - 428

- என்றார், ஆகலான்,

‘கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெள்வினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவே
மேல்மக்கள் தம்வாயால் மீட்டு.’ - நாலடி:70

- இதிலுள்ள ஈற்றிரண்டடிகளைக்

'கீழ்மக்கள் கீழாய செய்தக்கால் செய்யவோ
மேல்மக்கள் தம்மறிவால் மீட்டு’

- என்று இக் கருத்துக்குத் தக மாற்றியுரைப்பினும் மிகப் பொருந்தும் என்க.