பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம் நூல் முகம் ('தமிழ்க்கடல்', 'சிவமணி ராய. சொ) அருளாளர்கள் பாடிய இறைவன் உறைகின்ற திருத்தலங்கள் தோறும் சென்று வணங்கிப் பேறு பெற வேண்டும் என்ற எண்ணம் 1955-ஆம் ஆண்டில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது தேவார திருவாசக-திவ்வியப் பிரபந்தம் பெற்ற பாடல் தலங்களைக் கண்டு வணங்குவது என்று தொடங்கி, 1957-இல் பெரும்பாலும் வணங்கி முடித்தேன். ஒரு சில தலங்களுக்கு மட்டும் 1957 க்குப் பின்னர் சென்று வந்தேன். அந்த நாளில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குள் என் தல வணக்கத்தை நிறைவு செய்தேன். என் அரிய நண்பர் க.வெ. சித.வெ.வேங்கடாசலம் செட்டியார் 1965 இல் திருத்தலப் பயணம் தொடங்க வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். மகிழ்ச்சியுடன் 28-1-65இல் தொடங்கினோம். சில தலங்கள் தவிர, 19-3-56இல் எங்கள் திருத்தலப் பயணத்தை நிறைவு செய்தோம். எனவே ஓராண்டு, ஒரு திங்கள்.இருபத்திரண்டு நாட்களில் எங்கள் பயணம் முடிவு பெற்றது. பயணத்தை மணிவாசகப் பெருமானை இறைவன் ஆட்கொண்ட, திருவாசகம் பெற்ற, திருப்பெருந்துறையில் தொடங்கினோம். நடு நாட்டில் மாணிகுழி என்ற திருப்பாதிரிப்புலியூருக்கு அடுத்த, தேவாரத் தலத்தில் முடித்தோம். தேவாரத்தலம் 275 இல் 269 தலங்கள் சென்றோம். நான் முதலில் சென்று வந்ததும் இவ்வளவு தலங்கள்தாம். எஞ்சிய 6 தலங்களில், ஈழநாடு என்ற இலங்கையில் இரண்டும், இமயமலைச் சாரலில் நான்கும் இருக்கின்றன. இலங்கையிலுள்ள இரண்டு தலங்களுக்கும் செல்ல முடிவு செய்திருக்கின்றோம்.