பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கோயில் (சிதம்பரம்) திருமூலநாதர்-உமையம்மை சபாநாயகர்-சிவகாமியம்மை சம்பந்தர்: 2 அப்பர்: 8, சுந்தரர்: 1. வழிபட்டநாள்: 25-12-55; 13-18.65, சிதம்பரம்: இரவில் நிலையம். கோயில் என்றாலே சிதம்பரத்தைக் குறிக்கும். சைவர்களுக்குக் கோயில் சிதம்பரம், வைணவர்களுக்குக்கோயில் திருவரங்கம். சிதம்பரத்திற்குப் பொன்னம்பலம் என்று பெயர். அம்பலம், அரங்கம் இரண்டுமே சபையைக் குறிப்பன. தில்லைப்பதி மூவர் தேவாரம் பெற்றதோடு திருவாசகத்தால் பெரிதும் சிறப்பிக்கப் பெற்றது. திருவாசகத்தில் சிதம்பரம் 65 இடங்களில் செப்பப்பெறுகிறது.திருவாசகம் அருளிய பெரியார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் பொருள், 'கூத்தப் பெருமானே' என்று காட்டித் தில்லைத் தலத்திலேயே கூத்தப் பெருமான் திருவடி நீழலில் இரண்டறக் கலந்தார் என்ப. தேவார-திருவாசகம் தவிர, பன்னிரு திருமுறைகளுள், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. திருமந்திரம், பதினொராம் திருமுறை, பெரியபுராணம் ஆகிய அனைத்தினும் தில்லைக் கூத்தன் பெருமை பெருகப் பேசப் பெற்றிருக்கின்றன. திருநீலகண்ட நாயனார், திருநாளைப்போவார் நாயனார். கூற்றுவநாயனார்.கோச்செங்கட்சோழ நாயனார்.கணம்புல்ல நாயனார் ஆகிய, அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஐவரும். மறைஞான சம்பந்த சிவாச்சாரியார்,உமாபதி சிவாச்சாரியார் ஆகிய, சந்தான குரவர் நால்வருள் இருவரும் வீடு பேறு அடைந்த பெருமை பெற்ற தலம் தில்லை.