பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 17

மாதத்தில் இருபத்தேழு நாட்களும் வெயிலே அடிக்கு மானால் அந்த வெயிலின் கொடுமை தாங்காமல் மக்களும் மாக்களும் துன்புறுவர். எனவே ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையும் என்று இடையிட்டு இடையிட்டு வெயிலும் மழையும் ஒரு மாதத்தில் அமையுமானால் அந்த மாதத்தில் வெப்பமும் தட்பமும்-கொடுமையும் குளிர்ச்சியும் அளவாக அமையும். இதைத்தான் திங்கள் மும்மாரி பெய்து என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். திங்கள் மும்மாரி பெய்ததால் மழை வளம் பெருகி வளம் மிகுந்தது. நெற் பயிர்கள் வயல்களில் ஓங்கி வளர்ந்தன. வயல்களில் மண் வளமும், நீர் வளமும் மிகுந்து இருந்த காரணத்தால் விளைந்த நெற்பயிர்கள் நீள நீளமாய் இருந்தன. செந்நெல் வயல்களில் கயல் மீன்கள் துள்ளித் திரிந்தன. இவ்வாறு வளம் நிறைந்து காணப்படும் வயல்களின் வரப்புகளில் குவளை மலர்கள் பூத்துக் குலுங்கின. குவளைப் பூக்களில் உள்ள தேனைக் குடிப்பதற்காக வரிகளை உடைய வண்டுகள் வந்து தேன் குடித்து, அத்தேன் குடித்த மயக்கத்தில் மயங்கிக் கண் துயில்கின்றன. மீண்டும் ஒரு முறை இவ் இயற்கைக் காட்சியினைக் காண்போம். நாட்டில் மாதம் மும்மாரி பொழிகின்றது. நீர் வளம் மிகுகின்றது. வயல்களில் செந்நெற் பயிர்கள் மிக உயரமாக வளர்கின்றன. அந்த வயல்களில் அடியில் தங்கி இருக்கும் நீரில் வாழும் கயல்மீன்கள் நெற்பயிற்களின் இடையே தாவிக் குதிக்கின்றன. வயலோரத்தில் வளர்ந்திருக்கும் குவளைப் பூக்களில் வண்டுகள் தேன் குடித்துவிட்டு மயங்கி அக்குவளைப் பூக்களையே படுக்கையாகக் கொண்டு உறங்குகின்றன.

இவ்வாறு

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள,

பூங்குவளைப் போதில் பொறிவண்டு

கண்படுப்ப,