பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

35

பால் சுரப்பதற்கு முன்னே கிழக்கு வெளுக்கும் நேரத்தில் பனிப்புல் மேய்ந்தால் பால் மிகுதியாகக் கறக்கும் என்பது ஆயர்களின் நம்பிக்கை. காலையில் பால் கறந்த பின்பு மாலை இருட்டும் வரை அப்பகற் பொழுதிலெல்லாம் மேய்ச்சல் நிலத்தில் வெளியே மேய விடுவதனை வழக்காறாகக் கொண்டிருப்பவர்கள் ஆயர்கள். முழுநாளும் மேய்வதற்கு முன் வைகறையில் எருமைகளைப் பனிப்புல் மேய விடுவதனைச் சிறுவீடு’ என்று செப்புவர். இந்த அடையாளத்தைத் தான் உள்ளே இருப்பவளுக்கு,

‘எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்”

என்று வெளியே இருப்பவள் சொல்கிறாள்.

அவரவர் வீட்டிற்கு அருகிலேயே உள்ள அவர் களுக்குச் சொந்தமான பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் எருமைகளை மேய்வதற்கு விடுவதைச் சிறுவீடு’ என்பர். அந்தச் சிறுவீடு, உள்ளே படுத்திருக்கும் பெண்ணின் தோட்டத்திலேயே அமைந்திருக்கலாம். அதைக்கூட உணரவில்லையா என்று கேட்கும் போக்கில் வெளியே இருப்பவளின் பேச்சு அமைகின்றது. எருமைகள் மட்டுமா எழுந்து விட்டன? ஒவ்வொரு வீட்டில் உள்ள பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் நீராடப் போவதற்குப் புறப்பட்டு விட்டார்கள். பெண்கள் நோன்பு நோற்கப் புறப்பட்டு விட்டார்கள். நோன்புக்கு முன் நீராட வேண்டும். அதற்காகப் புறப்பட்டு விட்டார்கள். எனவே நாங்களும் அவர்களோடு செல்ல வேண்டும். உன்னை விட்டுப் போவது உரிய செயல் ஆகாது. எனவே முன்னால் போகின்றவர்களைத் தடுத்து நிறுத்தி, உன்னை அழைப்பதற்காக உன் வீட்டு வாசலில் கூடியுள்ளோம் என்கின்றனர். மேலும்

‘கோது கலமுடைய பாவாய்’

என்கின்றனர்.