பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணபெருமான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்லி மங்கல வினைகள் எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என்று திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர்.

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று திருவரங்கத்துறை திருவரங்க நாதரையே தம் மனத்துள் நாயகராக வரித்து வாழ்ந்தவர் கோதை நாச்சியார். பெரியாழ்வார் பூமாலை சூட, கோதை நாச்சியார் திருமாலுக்குப் பாமாலை சூட்டினார். அவர் பாடிய பாடல்கள் இலக்கிய உலகின் இணையற்ற பாடல்கள் எனலாம்.

திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திவ்வியப்பிரபந்த வியாக்கியான சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம் ஆண்டாளின் பெருமையைப் பின் வருமாறு விளக்கியுள்ளார் :

“தேக நலத்தில் சிரத்தையுடைய சாதாரண மனிதர்களை விட ஆத்ம சொரூபம் அறிந்த ரிஷிகள் பல மடங்கு உயர்ந்தவர்கள். ரிஷிகளை விட ஆழ்வார்கள் பன்மடங்கு உயர்ந்தவர்கள். மற்றைய ஆழ்வார்களை விடப் பெரியாழ்வார் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அந்தப் பெரியாழ்வாரை விட ஸ்ரீஆண்டாள் அநேக மடங்கு உயர்ந்தவள்” என்கிறார்.

மேலும் வைணவ சமயத்தில் மிகப் பெரிய ஆச்சாரிய சீலரான பூரீபெரும்புதூர் இராமாநுசர் திருப்பாவையில் ஆழங்கால்பட்டு நின்றவர். அவர் தம்மைத் “திருப்பாவை ஜியர்” என்று சொல்லிக் கொண்டவர்.

ஊர்ப் பெண்கள் வைகறையில் தூக்கத்திலிருந்து எழுந்து தம்மொத்த சிறுமியர்களை வீடு வீடாகச் சென்று அழைத்து, தம்மோடு