பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 51

இலங்கை வேந்தனாகிய இராவணனுக்கு எத்தகைய தீங்கும் இழைக்காதபோதும், இராவணன் சீதைபால் மையலுற்று மாறுவேடம் தாங்கிவந்து சீதையைக் கவர்ந்துசென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இம்முறையற்ற செயலால் பொல்லாங்கு சூழ்ந்த அவ்வரக்கன் இராமன் அம்புக்கு ஆற்றாது போர்க்களத்திலே பொறாது ஒழிந்தான். இராவணனை மிக எளிதாகக் கிள்ளியெறிந்து தன் பகைமுடித்துச் சிறையிருந்த செல்வியை மீட்டு வந்தான். இராமன் என்பதனைக் கோதை நாச்சியார் நயம்பட உரைக்கின்றார்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா

அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்

போய்

இவ்விருவருடைய பெருமையினையும், வெற்றியி னையும் திருவாய்ப்பாடிச் சிறுமியர்கள் பாடிக்கொண்டு பாவை நோன்பு நோற்க வேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். அந்த நேரம் சுக்கிரன் உதயமாகி வியாழன் என்றும் பிரகற்பதி என்றும் சொல்லப்படும் கோள் கிரகம் அஸ்தமனமாகிவிட்டது.

வெள்ளி எழுந்து

வியாழன் உறங்கிற்று

என்னும் தொடர் உன்னி உணரத்தக்கதாகும். இத்தொடர் வான சாத்திரக் குறிப்பைக் கொண்டதாகும். இத்தொடர் புலப்படுத்தும் வான சாத்திரக் குறிப்பைக் கொண்டு இந்நாள் கி.பி. 731-ல் வந்ததென்றும் அதன் வழி ஆண்டாளின் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டென்றும் குறிப்பிடுவர்.