பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
     நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
     கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
     கார்மேனிச்செங் கண்கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்,
     பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


“அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்

-பிஞ்சாய்ப்

பழுத்தாளை யாண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து”

தமிழ்நாட்டில் மிகப்பெரும் சமயங்களில் சைவமும், வைணவமும் தொன்மைமிக்க சமயங்களாகும். ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்ற தொல்காப்பிய நூற்பாவின் படி, பண்டையோர் காடும் காட்டைச் சார்ந்த முல்லை நிலத்திற்குத் தெய்வமாக மாயோன்’ என வழங்கும் திருமாலைக் கொண்டனர். மேலும் தொல்காப்பியனார் புறத்திணை இயலில் ‘பூவை நிலை’ என்று குறிப்பிடுவதும் காயாம்பூ வண்ணனாகிய திருமாலைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் திருமாலைப் பற்றிய செய்திகள் நிறைய உண்டு. நற்றிணையின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் மாயோனைப் பற்றியதாகும். ‘மாநிலம் சேவடியாக’ என்று தொடங்கி, தீதற விளங்கிய திகிரியோனே’ என முடியும் அப்பாடலில் திருமாலின் பரத்துவம் பேசப்படுகின்றது.