பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. குத்துவிளக்கெரிய

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.

நப்பின்னைப் பிராட்டியைத் துயிலெழுப்ப முனைந்த திருவாய்ப்பாடிப் பெண்கள் மீண்டும் கண்ணனை எழுப்ப முற்படுகின்றார்கள். பாசுரத்தின் தொடக்கமே குத்து விளக்கெரிய’ என்று மங்கலமாக அமைகின்றது. தமிழர் வீடுகளில் குத்து விளக்கு ஒரு மங்கலப் பொருளாகும். குத்து விளக்கு ஏற்றாமல் எந்த மங்கல நிகழ்ச்சியும் தமிழர் வீடுகளில் இன்றளவும் நிகழ்வதில்லை. இப்பாசுரத்தின் தொடக்கமே ஒர் அழகிய காட்சி ஒவியமாக அமைந்துள்ளது. திருவாய்ப்பாடியில் கண்ணன் வசிக்கும் திருமாளிகையில் குத்து விளக்குகள் எரிந்த வண்ணம் உள்ளன. கண்ணன் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலின் மேல் அமைந்துள்ள பஞ்சு மெத்தையில் அமர்ந்துள்ளான். கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைத் தன் அழகிய கூந்தலில் அணிந்துகொண்டு ஒளிமயமாகத் திகழும் நப்பின்னைப் பிராட்டியோடு கண்ணன் மகிழந்து பேசிக் கொண்டிருக்கிறான். “மலர் போலும் மலர்ந்திருக்கும் மார்பினை உடைய கண்ணனே! எங்கள் மேல் இரக்கம் வைத்து வாய்திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டாயா?” என்று இரங்கி ஏங்குகிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணனோ வாய் திறந்தபாடில்லை. பாசுரத்தைக் காண்போம்.