பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 79

அடி பணிந்து சரணாகதி வேண்டுவார்கள் என்கிறார்கள் பெண்கள். எத்திசையும் உழன்று ஒடி எங்கும் புகலற்று இளைத்து விழுந்த காகம் என்று காகாசுரன் இராமனைச் சரண் புகுந்த கதையினை நாம் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். வைணவ சம்பிரதாயத்தில் சரணாகதித் தத்துவம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கண்ணனின் வலிமைக்கு முன் ஆற்றாது தோற்ற பகைவர்கள் அவனுடைய பாதாரவிந்தங்களே இனி உய்யும் வழி என்று கண்டு கண்ணன் கழலிணைகளில் சரண் அடைவர்.

வேதாந்த தேசிகர் இந்தச் சரணாகதித் தத்துவத்தை மிக விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இங்கோ ஆய்ப்பாடிப் பெண்கள் “கண்ணா! உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதியில்லை. உன்னையே சரணடைய வந்திருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்கள். அவன் தங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இரண்டு ஏதுக்களை எடுத்துக் காட்டுகிறார்கள். உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே” என்பதும்; மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போல என்பதும், அவன் சரணாகதி தரத் தக்கவன் - உலக உயிர்கள் உய்யும் பொருட்டே வானுலகத்திலே இருந்து மண்ணுலகத்திற்கு இறங்கி வந்திருக்கும் கருணைக்கடல் என்பதும் புலப்படுத்தப் பட்டுள்ளன.

இவ்வாறு கண்ணன் கழலடிகளைப் போற்றி, அவன் அருள வேண்டுவது அவசியம் என்பதைத் இத் திருப்பாசுரத்தில் திருவாய்ப்பாடிப் பெண்கள் வற்புறுத்து கிறார்கள். இத்திருப்பாசுரத்தில் ஞானாசிரியன் - சீடன் உறவு, பசு - பால் பாக்கியம் என்பவற்றால் விளக்கப் பட்டிருப்பதையும் காணலாம்.