பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 91

கண்ணனுடைய பிறப்பையும் வளர்ப்பையும் பற்றிப் பேசிய பெண்கள் அடுத்து, அவனுடைய மாமன் கம்சன் கண்ணனை அழிக்க மேற்கொண்ட வஞ்சகச் செயல்களை வகைப்படுத்திக் காட்டுகின்றார்கள். முன்னைய திருப்பாசுரத்தில் வண்டி வடிவில் வந்த அசுரன், விளாமர வடிவில் வந்த அசுரன் முதலானவர்களையெல்லாம், கண்ணன் கொன்றொழித்த திறத்தினைப் பார்த்தோம். அதற்கு முற்பட்ட பாசுரங்களில் பேய் வடிவில் வந்த பூதனை என்னும் அரக்கியை மாய்த்த திறமும் கண்டோம். குவலாய பீடம் என்னும் யானைவடிவில் வந்த அசுரன் பட்ட பாட்டினையும் கண்டோம். கண்ணனுக்குத் தீங்கிழைக்கக் கம்சன் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் பொடிப்பொடியாய் உதிர்ந்து போய்விட்டன. கண்ணன் அழிந்தான் என்று ஒப்புக்கு அலறி அடித்துக்கொண்டு, பொய்யாக நடித்து அழவேண்டுமென்று திட்டமிட்டிருந்த கம்சனுக்கு அடிமேல் அடி விழுந்துவிட்டது. அவனுடைய முயற்சிகளெல்லாம் முனை மழுங்கிப் போய்விட்டன.

அத்தகைய கொடுங்கோலன் வாழும் நாட்டிலே வாழ்ந்த ஆண்களும், பெண்களும் அவனுடைய முறையற்ற செயல்களைத் தொடர்ச்சியாகக் கண்டு வயிறெரிந்தார்கள். அவர்களுடைய வயிற்று நெருப்பையெல்லாம் கண்ணன் வாரி கம்சன் வயிற்றில் போட்டுவிட்டான் என்கிறார்கள்.

தரிக்கிலா னாகித் தான்திங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! இவ்வாறு ஆய்ச்சியர் கண்ணனைப் பலபடியாகப் புகழ்ந்ததும், கண்ணன் இவர்களுடைய குறையைக் கேட்க, இவர்களும் தங்கள் குறையை மனம்விட்டுச் சொல் கின்றார்கள்.