பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 13


பெரியார்கள். அது பொருந்த வேண்டாமா? பிறப்பு வேண்டும். ஏன், தெரியுமா? பிறப்பு இல்லையேல் மனிதனுக்குத் தியாகம் செய்ய வாய்ப்பு ஏது? தியாகம்; விளம்பரத்திற்கு அப்பாற் பட்டது. ஆனால், அன்புத் தளைக்கு உட்பட்டது! சொல்லைச் செயற்படுத்தி, செயலை வாழ்க்கையாக்கி வாழ முனைபவனே - வாழத் துணிபவனே மனிதன்."

ஞானசீலன் எழுதி வருகின்ற வளர்கதையின் தலைவனே வாய்மொழியாக உதிர்த்திருந்த வாசகங்கள் அவை. அவற்றின் வாய்மை மொழிகளாகவே அவர் உணர்ந்தார். அவருக்குச் சொந்தமான இலக்கிய நெஞ்சம் எழுதிக் கொடுத்த தத்துவம் அவருக்கு நிறைவு தந்தது. 'பூவா, தலையா?' என்ற இரண்டுபட்ட வினாக்குறியீட்டுக்கும் மீறிய யதார்த்தச் சொல்லடுக்காகவே அவருக்குப்பட்டது. எழுத்தாளன் எண்ணத்தால் உயர்ந்து எழுத்தால் உயர வேண்டும்!

'நடந்தாய், வாழி, காவேரி!' எனும் மகுடம் ஏற்ற தொடர்கதையின் முன் பகுதிகள் அச்சு வடிவமாய் இருந்தன.

நாயகியின் குணச்சித்திர அமைப்பில் ஒரு கீறல் விழுந்து விட்டது. கீறல் விழுந்த இசைத் தட்டாக அவருள் புலம்பல் எழுந்தது.

சாம்பல் தட்டில் இடம் இல்லை!

நெஞ்சில் இடம் இருந்த எண்ணங்களைப் போட்டுக் குழப்பிக் கொண்டார். அறையினின்றும் வெளியே வந்தார். டவல் தோளில் தவழ்ந்தது. நெஞ்சில் தவழ்ந்தாள் கதைத் தலைவி. நினைவில் தவழ்ந்த அந்தப் புதிய முகத்தைச் சுட்டினாள். சுட்டும் விழிச் சுடரில் ஒளிகாட்டி, ஒளி தேக்கும் சீலம் அவர் நேத்திரங்களில் ஓடியது.