பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


ஞானசீலனுக்கு மெய் சிலிர்த்தது. விழி யுணர்வு சிலிர்த்தது. “அம்மா!” என்று ஓடிப் போய் விழுந்தார். கரங்களில் போட்டுத் தாலாட்டிய மகனைப் பாதங்களில் கிடத்தவா அவள் சம்மதிப்பாள்? கோசலை அம்மாள் விதரணை புரிந்தவள் இல்லையா?

“தம்பி!” என்று நெஞ்சினின்றும் புரண்ட பாச வெள்ளத்தில் சொற்களைத் தோய்த்தெடுத்து வெளிக் காட்டினாள் அவள். நெஞ்சிலும் நீர்; ஒடுங்கிக் குழிவிழுந்த நயனங்களிலும் நீர். நீர் வெளிப் பெருக்கிடையே தாய் தத்தளித்தாள்; தாயுடன் சேர்ந்த மகனும் தத்தளித்தார்!

“தம்பி, ரொம் ரொம்ப இளைச்சுப் போயிட்டீயேப்பா !”

“அதெல்லாம் இல்லேம்மா. நான் இளைக்கலே. நீ தான் அம்மா, இளைச்சிருக்கே!... வயதுக் காலத்திலே நான் உன் பக்கத்திலேயே இருந்தால், நல்லாயிருக்கும். ஆனா ஆண்டவன் அதுக்கு உண்டான வசதியை நமக்குத் தரலே.”

“சரி சரி, இனிமே எனக்குப் பயமில்லே. ராத்திரி தான் பயப்பட்டேன். இப்ப தெளிஞ்சிருக்கு. போய் குளிச்சுப்பிட்டு வந்து பலகாரம் தின்னு. அப்புறம் நாம பேசலாம். பக்கத்து வீட்டு ஐயாவோட பொண்ணுதான் எனக்குத் தெய்வமாட்டம் துணை இருந்துச்சு. இப்ப பலகாரம் கூட அதுதான் தயார் பண்ணியிருக்குது,” என்று சொல்லி நிறுத்தினாள் கோசலை.

குனிந்த தலை நிமிரவில்லை மகன் ஞானசீலன்.

உதட்டுச் சிரிப்பை மாற்றவில்லை அம்மா கோசலை.

ஞாயிறு; இளங்காலைப் போது.

டர்க்கி டவலால் சுருட்டை முடிகளைத் தேய்த்துத் தேய்த்துத் துவட்டினார் ஞானசீலன். காவிரி மண்