பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


பொழுது போக்கு ஆயின. பின்னர், திருச்சியில் முதல் வாரத்தின் தொடக்கத்திலும், அப்புறம், வாரத்தின் கடைசி நாளிலும் அவர் உரை நிகழ்த்தினார். துறவு நெறி என்பதுபற்றி ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றியும், ‘அறநெறி’ என்பது குறித்து அண்ணல் காந்தியடிகளைக் குறித்தும் பேசினார். சிறுபிள்ளை நாட்களில் வாயில்லாப் பூச்சியாக விளங்கியவர் தம்முடைய பேச்சுத் திறனால் எவ்வளவு உள்ளங்களை வசப்படுத்திக் கொண்டு விட்டார்! சமுதாயத்தின் பொதுக் கண்ணோட்டத்தில், பேச்சுத்தான் முதல் கவர்ச்சியாகப் பொது மக்கள் மனத்தில் பதிகிறது. அப்புறம்தான் எழுத்து.

‘...சிருஷ்டித் தத்துவப் புதிரின் பிரதிநிதியாகத் தோன்றிய மனிதனின் பலத்துடனும் பலவீனத்துடனும் தோன்றிய காந்தி, அன்பின்பால் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாலேயே ‘மகாத்மா’வாக ஆக முடிந்தது!.. சாதாரண மனிதர்களைப் போலவே அவரும் சிறுவயதில் காமக் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்த உண்மையை எவ்வளவு மனத்துணிவுடன் ஒப்புக் கொள்கிறார்! மகாத்மா என்னும் பட்டத்தினால் ஒரு கணப்பொழுதாவது நான் பெருமைப்பட்டுக் கொண்ட தாக எனக்கு ஞாபகமில்லை என்றுபகிரங்கமான உள்ளத் தூய்மையுடன் அவரைப் போலச் சொல்லிக் கொள்ள வேறு யாரால் முடியும்? வங்காள மாகாணத்தின் சிறு கிராமம் ஒன்றில் தக்ஷிணேசுவரர் ஆலயத்தில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்த ராமகிருஷ்ணர், அன்பின் முதிர்ச்சியால், குருவின் துணை இல்லாமலேயே பராசக்தியின் தரிசனத்தைப் பெற முடிந்ததை என்ன வென்பது? உள்ளமே கோயில் என்றார் திருமூலர். தெய்வம் நீ என்றுணர் என்று வழி மொழிகிறார் பாரதி.