பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ✽ 85




ஆக, அவரவர்கள் செயல்களே அவரவர்களை உச்சத்தில் ஏற்றி வைக்கின்றன !...”

குறிப்பு நோட்டைப் புரட்டிய அவர் பார்வையில் இவ்விதமான சிந்தனை நயங்கள் சில புரண்டன. குறுமணலில் உடம்பைப் புரட்டிப் படுக்கும் மண்ணுளிப் பாம்பைப்போல ஞானசீலன் புரண்டு படுத்தார். அள்ளித் தெளித்த மணலின் அடிச்சுவடுகளென, அவரது நெஞ்சில் கால்பாவி ஊன்றி நடந்து கொண்டிருந்த வாணியின் நினைவுகளைப் பற்றிக் கொண்டு அவரும் அதே மணல் பரப்பில் கை கோர்த்து, மனம் பின்னி நடந்தார். இப்படியாக ஜோடி சேர்ந்து நடந்தவாறே நாட்கள் சிலவற்றையும் நடக்கச் செய்தார். வெளியூர்ப்பயணம் சித்தித்த இந்த நாட்களிலே அவர் தமக்குத் துணையாக வாணியையும் வாணிக்குத் துணையாக அவளது அந்த டைரியையும் பாவித்த நிலையில்தான் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கின்றது.

அந்த நாட்குறிப்பு கண்களில் பட்டதுதான் தாமதம். உடனே குபுக்கென்று சுடுநீர் பொங்கித் திரள ஆரம்பித்தது. இன்பமும் துன்பமுமான எண்ணங்களைச் சதா நோக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் சூடு பிடித்திருந்த அவரது மனம் எம்பி எம்பி அடங்கியது. அந்த நாட்குறிப்பு தன் பைக்குள் ஏன் வந்தது, எப்போது வந்தது என்பதற்குரிய ஆராய்ச்சி நடத்தக்கூடிய திடத்தில் அவர் இருக்கவில்லை. ஒவ்வொரு நடப்புக்கும் ஒவ்வொரு உள்ளர்த்தம் இருக்கத்தான் இருக்கும் என்னும்படியான உள்ளழுந்திய நினைவை இப்போதும் அவர் நினைத்துப் பார்த்துவிட்டு, சும்மா இருக்க ஒப்பவில்லை. வாணியிடம் அதுபற்றிக் கேட்க வேண்டும் என்றுதான் எண்ணித் துணிந்தார். காலத்தையும் நேரத்தையும் 'வா, வா வென்று கூவி அழைக்கும் வானம்பாடியாக உருமாறினார் அவர்.