பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ✽ 89




15. அழகுத் தேவதையென வந்தாள்!

அந்தி மயங்குகின்ற நேரம. மனிதர்கள் மனங்களும் மயங்குகின்ற நேரம். பிள்ளைக் கனியமுதுகளைக் கண்டு பெற்றவர்களும் மற்றவர்களும் மயங்கினார்கள்.

காதல் சிட்டுகளை ஒரக் கண்ணால் பார்த்து, நெஞ்சில் நிறைத்துக் களித்து, மயங்கி எக்களித்தார்கள் இளம் பிள்ளைகள்.

பெரிய கோயிலின் பின் புறத்தே அமைக்கப் பட்டிருந்த புள்ளிமான் காட்டின் நடுவில் ஒட்டிப் போடப் பட்டிருந்த சிமிண்டுத் திட்டில் தாம்பத்ய மணம் மயங்கிக் கமழ்ந்தது.

இப்படிப்பட்ட மயக்கக் காட்சிகளை அழகுக் கவர்ச்சியுடன் திரையிட்டுக் காட்டிய பெருமை சிவகெங்கைத் தோட்டத்தைச் சார்ந்தது.

ஞானசீலன் கதர்த் துண்டை இடது தோளில் போட்டுக்கொண்டு, ஜிப்பாவும் தானுமாகப் புறப்பட்டுச் சுற்றி வந்து தோட்டத்தைச் சூழ்ந்துகொண்டார். அவரைத் தொடர்ந்தார்கள் தோழர்கள். நிலக்கடலையைக் கொரித்துக் கொண்டே சிகரெட்டின் உறவு பொலிய அட்டனைக் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் அவர். கூடவிருந்த தமிழரசுக் கழகத்தின் சேலம் மகாநாட்டைப் பற்றிய பேச்சில் அவர்கள் கவனம் திரும்பியது. வடக்கெல்லைப் பிரச்சினையில் மடங்கியது. கடைசியில் எழுத்தாளர் வட்டத்தில் நின்றது. அவ்வப்போது ஞானசீலன் குறுக்கிட்டுத் தமது சொந்தக் கருத்துகளைத்