பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

திருமந்திரம்


கருத்து’’ எனவரும் பரிமேலழகருரையும் இங்குக் கருதத் தக்கனவாகும். அத்தகைய அந்தணர் சேர்தலால் புவி வளம் பெற்றுச் செழிக்கும் என்பார் ‘அந்தணர் சேரும் செழும்புவி’ என்றார். நந்துதல்-கேடு. நரபதி-வேந்தன். அந்தி சந்தி என்பன மாலையந்தியையும் காலையந்தியையும் குறித்தன. ஆகுதி-வேத நெறிப்படி செய்யப்பெறும் வேள்வி.

அரசாட்சி முறை

அரசியல் நெறி முறைமையைக் கூறும் பகுதி; திருக்குறளிலுள்ள கொடுங்கோன்மை என்ற அதிகாரப் பொருளை அடியொற்றியது.

51. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே. (238)

அரசியல் நெறி முறையைக் கல்லாமையால் முறைகோடிய அரசனால் விளையும் துன்பத்தினைக் கூறுகின்றது.

(இ-ள்) தனக்குரிய அரசியல் நீதி முறையைக் கற்றுணராத அரசனும் உடலினின்றும் உயிரைக் கவரும் கூற்றுவனும் உயிரை வருத்தும் கொடுஞ் செய்கையால் தம்முள் ஒப்பவராவர். அவ்விருவருள் நீதி நெறியைக் கல்லாத அரசனவிடக் காலமுணர்ந்து உயிர்கொள்ளும் முறைமையுடைய கூற்றுவன் உயிர்க்கு மிகவும் நல்லனாவன். எவ்வாறெனில் தனக்குரிய நீதியைக் கற்றுணராத அரசன் அறமுறையினை யுணராமையால் (தன் கருத்துக்கு ஒவ்வாத நன்மக்களையும்) கொல்க எனக் கடுந்தண்டஞ் செய்வான். காலனோ நல்லோரை நெருங்கவுமாட்டான் எ - று.