பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

95


இல்லாதாரை வெற்றித் திறம் வாய்ந்த வேந்தன் அவர்தாம் மேற்கொண்ட வேடத்திற்குப் பொருந்திய நல்லொழுக்க நெறியில் நிலைபெற்றொழுகச் செய்தால் அச் செயலே அவர்க்கும் பிறர்க்கும் வீடு பேற்றின்பத்தைத் தரும் நன்னெறியாகும் எ - று.

வேடநெறி நில்லார் என்றது, தாம் புறத்தே மேற்கொண்ட தவவேடத்திற்குப் பொருந்த அகத்திலும் அத் தவநெறியினைப் பற்றி நடவாத கூடாவொழுக்கத்தாரை. தாம் மேற்கொண்ட வேடத்திற்கு ஏற்பத் தவவொழுக்கத்தினை நெகிழா தொழுகும் அகத்து உணர்வுடையவர்களே மெய்ம்மையான தவமுடையார் என்பார், ‘வேடநெறி நிற்போர் வேடம் மெய் வேடமே’ என்றார். தவமேயன்றிப் புறக்கோலமாகிய தவவேடம்கூட முன்னைத் தவவொழுக்க முடையவர்களாலேதான் மேற்கொள்ளத் தக்கது என்பதும் அத்தகைய உள்ளத்துரனில்லாதவர்கள் தவவேடத்தை மட்டும் மேற்கொள்வது பயனற்ற முயற்சியாய் முடியும் என்பதும்

“தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது” (262)

எனவரும் திருக்குறளிற் குறிக்கப்பெற்றமை காண்க.

ஆகுதல் - பொருத்தமுடையதாதல். நாடகமாந்தரால் மேற்கொள்ளப்படுவதும் வேடம் எனப்படும்.

‘நாடகத்தா லுன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்’

என்பது திருவாசகம்.