பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

திருமந்திரம்


ஆகமச் சிறப்பு

12. பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங்
கண்டவர் கூறுங் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ் சொன்ன வாறே (59)

உலகில் வழங்கும் எல்லா மொழிகளும் மக்கட்குலத்தார் நல்லறவழியிற் கூடிவாழ்தற்கென இறைவனருளால் தோன்றி வளம்பெற்றனவே என்பது உணர்த்துகின்றது.

(இ - ள்) கலை நூற்புலமையுடையார் எனச் சிறப்பாகப் போற்றத்தக்கவர்கள், (பரதகண்டத்து வாழும் மக்கள் பேசும்) பதினெண் மொழிகளையும் கற்றுணர்ந்து அவ்வம் மொழியாளர் கூறும் நல்லறக் கருத்துக்களை உணர்ந்து ஒழுகுபவர்களேயாவர். கலைநூற் புலவர் பயிலும் பதினெண் மொழிகளும் அண்டங்களுக்கெல்லாம் முதல்வனாகிய இறைவன் (உலகத்தார்க்கு) அறத்தினை வகுத்தருளிச் செய்த வழிகளாம் எ-று.

பண்டிதர் - புலமைச் செல்வர். பதினெண்மொழிகளாவன வடவேங்கடம் தென்குமரி ஆகிய எல்லைக்குள் வழங்கும் தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள பதினேழு நிலப்பகுதிகளில் வழங்கும் பதினேழு மொழிகளும் ஆகும். அம்மொழிகள் வழங்கும் பதினேழ் நிலங்களைக் குறிப்பது,

“சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம்

கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம்

கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதினேழ் புவி தாமிவையே.”