பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v



சமயங்களுக்கும் பொதுவானவை. சைவத்தைப் பற்றிய சிறப்பு முறைகளை -ஆலய அமைப்பு முறைகளை- வழிபாட்டு முறைகளைச் சிறப்பாக விளக்குவன சிவாகமங்கள். சைவத்திற்கு இருப்பதுபோலவே பிறசமயங்களுக்கும் உரிய சிறப்பு முறைகளை விளக்கும் ஆகமங்கள் உண்டு. வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற ஆகமங்கள் வைணவத்தைச் சிறப்பாகத் தெளிவுபடுத்தும் வைணவ ஆகமங்கள்.

வடமொழியில் உள்ள வேதம் போல மக்கள் வாழ்வியல் முறைகளை - பொது அறங்களைத் தொகுத்தும், வகுத்தும் முறைப்படுத்தி உரைப்பது தெய்வப் புலவர் செய்த திருக்குறள்.

சிவாகமத்தைப் போலச் சைவத்துறையின் சிறப்பு அறங்களைத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும் முறைப்படுத்தி உரைப்பது திருமூலர் அருளிய திருமந்திரம்.


“பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும் காலோத்திரம்
துற்றநன் சுப்பிரம் சொல்லும் மகுடமே”

என்று கூறும் ஒன்பது ஆகமங்களின் பிழிவாகத் திருமந்திரம் விளங்குகின்றது.

வேதாகமங்களும், பொது மறையாகிய திருக்குறளும், சிறப்பு ஆகமமாகிய திருமூலர் திருமந்திரமும், மூவர் தமிழும் திருவாசகமும் ஆகிய அனைத்தும் சொல்லும் முறை வேறுபட்டாலும் ஒரு பொருளையே உணர்த்திடும் நூல்கள் ஆகும்.