பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

திருமந்திரம்


தின் மண்ணைக் கொண்டு இவ்வுலக மக்கள் யாக்கையாகிய கலங்களைச் செய்தான். (வேட்கோவன் செய்த) மண்குடம் உடைந்தால் அதன் உடைந்த பகுதியினைப் பயன் கொள்ளும் ஓடு எனக்கொண்டு அதனை எறிந்து விடாமல் வீட்டிற் பாதுகாப்பில் வைப்பர் உலகத்தார். உடலாகிய குடம் உடைந்தால் அதனைச் சிறிது நேரம் கூட வைத்திருக்க விரும்பமாட்டார்கள் எ று.

இடைமுற்றம்-இடையாகிய நிலத்தின் முற்றம். குளம் என்றது மாதாவுதரத்திலமைந்த கருப்பையினை. குயவன் என்றது படைத்தற் கடவுளாகிய பிரமனை. மாநிலம் என்றது நிலத்திலுள்ள உடம்புகளை. குடம் - மட்குடம். ஒடு - குடத்தின் உடைந்த பகுதி. அதுவும் நெருப்பு முதலியவற்றை எடுத்தற்குப் பயன்படுதல் கருதி அதனை வீட்டிற் சேமித்து வைத்தல் இயல்பு.

35. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனவிக் கூட்டையே.

உயிர் பிரிந்தபின் கணமும் நிலையில்லாத யாக்கைக்குச் செய்யப்படும் சடங்குகளால் எத்தகைய பயனுமில்லை என்கின்றது.

(இ-ள்) தோற்பையாகிய உடம்பில் நின்று வினைகளை மிகச் செய்து அவ்வுடம்பினைப் பேணும் கூத்தாடியாகிய உயிர் புறப்பட்டுச் சென்றபின் வெறுங்கூடாகிய இவ்வுடம்பினைக் காக்கைகள் கவர்ந்துண்டால் வரும் சிதைவு யாது? கண்டோர் இகழ்த்துரைத்தலால் வரும் இழிவு யாது? பால் துளிகளைத் தெளித்தலால் வரும் ஆக்கம் யாது? பலரும் கூடிப் போற்றினால் வரும் உயர்வு யாது? எ-று.