பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

73


வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி
         வறிஞர்க் கென்று
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்
         நுங்கட் கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க உதவா
         உடம்பின் வெறுநிழல்போல்
கையிற் பொருளும் உதவாது
         காணுங் கடைவழிக்கே. (18)

என வரும் கந்தரலங்காரமாகும். எனவே நாம் தேடி வைத்த பொருள் நமக்கேயாகும் என்றெண்ணி அறஞ்செயாது வறிதேயிருத்தல் அறிவிலார் செயலாம் என்பது கருத்து. இனி, பிறிதின்கிழமைப் பொருளேயன்றித் தற்கிழமைப் பொருளாகிய கண் முதலிய பொறிகளும் உடலோடு பிரிவின்றி ஒக்கவுள்ளனவாயினும் அவையும் கடைபோகப் பயன் தருவன ஆகா என்பார் ‘உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காண் ஒளி’ என்றும் அக்கண்ணொளியை எடுத்துக்காட்டாகக் கொண்டு நிலையாமையைக் கண்டுகொள்வீராக என்பார், ‘கண்டு கொளிரே’ என்றும் கூறினார். உயிர்க்கு அகத்துடைமையாகிய கண் முதலிய புலன் ஐந்தும் ஒருவர்க்குக் கடைசிவரை பயன்படா என்பதனை,

‘புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
          யறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்த போதாக’

எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயலாலும்,

காலன் வருமுன்னே கண்பஞ்சடை முன்னே

எனவரும் பழம்பாடலாலும்,

‘கண் செவி கெட்டு’ (சிவ.சூ-உ.அதி ௩) எனவரும் சிவஞான போதத்தாலும் அறிந்து கொள்ளலாம். இதனால்