பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

திருமந்திரம்


நிலையாச் செல்வத்தையே கருதிச் சேர்வார் நிலைத்த துணையினைப் பெறார் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) வாழ்க்கைத் துணையாகிய மனையும் மக்களும் உடன் பிறந்தார் முதலிய ஏனைச் சுற்றத்தாரும் (எமக்குத் தருதற்குரிய) ஒள்ளிய பொருளின் அளவு எவ்வளவு என்று வினவுவர். (வேறொன்றும் செய்யமாட்டார்). இங்ஙனம் விரும்பப்படும் பொருளையே பெருக்கிக் கொண்டு (இறைவனது திருவருளை நாடாது) இருப்பார்க்கு (உயிர் உடலை விட்டுப் பிரியும் கலக்க நிலையில்) இங்கே வாவென்று கூவி அழைத்துக்கொள்ளும் ஆருயிர்த் துணையாகிய ஒப்பற்ற முழுமுதற் பொருளைக் கூடுதலும் இயலுமோ? (இயலாது) எ-று.

வாழ்வு மனைவி-மனை வாழ்க்கைக்கு இன்றியமையாத வாழ்க்கைத் துணையாகிய மனைவி. மக்கள்-பிள்ளைகள். உடன்பிறந்தார்-சகோதரர். எமக்கு ஒண்பொருள் அளவு எது என்பர்-எங்களுக்கு நீ தருதற்குரிய ஒள்ளிய பொருள் எவ்வளவு எனத் தம் நலம் ஒன்றையே குறிக்கொண்டு வினவுவதன்றிப் பொருளைத் தரும் உங்களுக்கு எத்தகைய உதவியையும் செய்ய முற்படுவாரல்லர். மேவுதல்-விரும்புதல், அதனை விரிவு செய்தலாவது அப்பொருளைக் கொண்டு அறஞ் செய்யாது அப்பொருளையே ஒன்று பத்தாக மேன்மேலும் பெருக்குதல். கூவுந்துணை என்றது சென்றுபுகும் வழியிதுவெனத் தெளியாது திகைத்து அலமரும் இடர்நிலையில் அக்கலக்கமகற்றிப் புகுநெறியிதுதான் இங்கே வா எனக் கூவியமைக்கும் வழித்துணை; வழித் துணை என்றது பிறவிச் சூழலிற்பட்டு வழிதெரியாது அலமரும் உயிர்களை இங்கே வாவென்று கூவியழைத்துக் கொள்ளும் வழித்துணை நாதராகிய இறைவனை.