பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

தேவ மகளிரின் அணிகொள் மேனி

(12-19) பெரிய மூங்கில் ஓங்கிய நெடுந்தொலைவு உயர்ந்துள்ள மலையில், சதங்கை சுற்றிய பொலிவுள்ள சிவந்த சிறிய அடியுடன் (பாதத்துடன்) கூடிய திரண்ட கால்களையும், வளைந்த இடுப்பினையும், மூங்கில் போன்ற தோளினையும், இந்திரகோபப் பூச்சி போன்ற-சாயம் - தோய்க்காமலேயே இயற்கையாகவே சிவந்துள்ள பூவேலைப்பாடுடைய உடையினையும், பல மணிகளை நிரவிக் கோத்த மேகலையணிந்த அல்குலினையும், கையால் செயற்கையாய்ப் புனைந்து உண்டாக்காத - இயற்கை யழகு வாய்த்த பொலிவினையும், நாவல் (சாம்பூந்தம்) என்னும் பெயருடைய ஒருவகைப் பொன்னால் புனைந்துசெய்த — விளங்கும் அணிகலன்களையும், நெடுந்தொலைவும் தாண்டி விளங்குகிற (பிரகாசிக்கிற) குற்றம் அற்ற திருவுடலையும் (உடையவராய்),

தேவமகளிரின் செயல்களும் ஆட்டமும்

(20-41) தோழிமார் ஆய்ந்து முடித்த—இணையாக இரண்டாக வகிர்ந்த — நெய்யீரப் பசையுள்ள கூந்தலிலே சிவந்த காம்பையுடைய சிறிய வெட்சிப் பூக்களை இடையிடையே செருகியும், பசுமையான தண்டையுடைய குவளை மலரின் தூய இதழ்களைக் கிள்ளிப் பதித்தும், தெய்வ உத்தி என்னும் பெயருடைய தலைக்கோலத்தையும் வலம்புரிச்சங்கு வடிவாய்ச் செய்த தலைக்கோலத்தையும் உரிய இடத்திலே அணிந்துவைத்தும் பொட்டு வைத்த மணம் வீசுகின்ற அழகிய நெற்றியில் சுருவினது பிளந்த வாய்போலச் செய்த சுட்டியினைத் தொங்கச் செய்து அழகுறுத்தியும், முழுதும் முடித்த குற்றம் அற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பக மலரைச் செருகியும், கரிய புற இதழுடன் துய்யினையும் (பூம்பஞ்சினையும்) உடைய விளக்கமான மருதப் பூக்கொத்துக்களை (அக்கொண்டையின் மேலே) பதித்தும்,