பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கிளையினின்றும் அழகுறத் தோன்றி எழுந்த—நீரின் கீழுள்ள செவ்விய அரும்புகளே இணைத்துத்தொடுத்த மாலையினைக் கொண்டையைச் சுற்றி வளைய வைத்தும், துணையாக இரு பக்கலும் வளவிய காதுகளில் நிறையச் செருகிய ஒள்ளிய அசோகந்தளிர் (கீழே தொங்கி) நுண்வேலை மிக்க அணிகலன் பூண்ட மார்பில் அசைந்துகொண்டிருக்கவும், திண்ணிய வயிரமுடைய நறுமணமுள்ள சந்தனத்தை அரைத்து உண்டாக்கிய பொலிவும் நிறமும் மிக்க குழம்பினை மணம் கமழும் மருதப் பூங்கொத்தினைப் பதித்தாற்போலக் கோங்கின் குவிந்த மொக்குப்போன்ற இள முலைகளில் அப்பியும், (மேலும் அந்தச் சந்தனக் குழம்பின் மேலே) விரிந்த வேங்கைமலரின் நுண்ணிய மகரந்தப் பொடியை அப்பிப்பதித்தும், அழகுபெறத் தோன்றும்படி விளாவினது குறுந்தளிரைக் கிள்ளி (அம்முலைகளின் மேல்) தெறித்துக் கொண்டும், கோழியைக் கொண்டு உயர்ந்த - எதிர்நின்று வெல்லும் (முருகனது) வெற்றிக்கொடி பெரிதும் வாழ்க என்று வாழ்த்தியும், பலருஞ் சேர்ந்து சிறப்பு மிக்க மலைப்பகுதியெல்லாம் எதிரொலிக்கும்படி (முருகன் மேல்) பாடியும், அஞ்சுதற்குரிய தெய்வ மகளிர் விளையாடுகின்ற சோலைகளை உடைய,

முருகனின் முடிமாலை

(42-44) குரங்கும் அறிய முடியாத மரங்கள் அடர்ந்து செறிந்த அடுக்கிய மலைப்பகுதியில் மலர்ந்துள்ள — வண்டுகளும் மொய்க்காத — நெருப்புப்போல் சுடர் விடுகிற பெரிய குளிர்ந்த காந்தள் பூ மாலைக் கண்ணியைச் சூடிய முடியை உடையவனும்,