பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

கந்தருவர் யாழ் மீட்டல்

( 138-142) வெண்புகையை மொண்டு கொண்டாற் போன்ற அழுக்கு இல்லாத தூய உடையினையும், மொக்கு வாய் திறந்து மலர்ந்த மலர் மாலை சுற்றியணிந்த மார்பினையும், செவியாலே இசையை நேர்ந்து அமைத்த-செய்வேலைப்பாடு மிகுந்த வார்க்கட்டினையுடைய நல்ல யாழ் பயின்ற நயமான உள்ளப் பாங்கினையும் உடைய மென்மையான மொழி பேசுபவராகிய கந்தருவர் என்னும் யாழோர் இனிய யாழ் நரம்பை மீட்டி இயக்குதற்காக,

கந்தருவர் தம் மகளிருடன் வருதல்

(143-147) நோய் இல்லாமல் நலமுடன் அமைந்த உடம்பினைப் பெற்றவரும், விளங்கும் மாந்தளிர் போன்ற மேனி பொருந்தியவரும். விளங்கும் போதெல்லாம் (ஜொலிக்கும் போதெல்லாம்) உரைத்த பொன்துகளின் பதிவு போல் விளங்கும் (ஜொலிக்கும்) தேமலை உடையவரும், இனிய ஒளிவீசும் மேகலை யணிந்த—கீழே சரிந்தும் மேலே உயர்ந்தும் அமைந்துள்ள அல்குலை உடையவரும் ஆகிய களங்கம் அற்ற கந்தருவ மகளிருடன் வந்து குற்றம் இன்றிச் சூழ்ந்து திகழ,—

[மூவர் வருகை]

திருமால்

(148-151) நஞ்சுடன் ஒடுங்கிக் கிடக்கும் துளையுள்ள வெள்ளிய பற்களையும் நெருப்பு எனப் பெருமூச்சு எறியும் அஞ்சத்தக்க கூடிய ஆற்றலையும் உடைய பாம்புகள் அழியும் படி அடிக்கிற—பல வரிகள் கொண்ட வளைந்த இறக்கையை உடைய கருடப் பறவையை ஏந்திய நீண்ட கொடியை உடைய செல்வனாகிய திருமாலும்,