பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருமுருகாற்றுப்படை

தெளிவுரை

முருகன் பெருமை

(1-6: ஒன்று முதல் ஆறாம் அடி வரை)

உலகத்தார் மகிழும்படி வலமாக எழுந்து உலகைச் சுற்றுவதுபோல் தோன்றுகிற—பலரும் புகழ்ந்து வணங்கும் செஞ்ஞாயிற்றைக் (காலையில்) நீலக்கடலில் கண்டாற்போன்று (நீலமயிலின் மேல் தோன்றி) விடாமல் வீசுகிற நெடுந்தொலைவு எங்கும் சென்று பரவி விளங்குகிற செவ்விய ஒளிவிளக்கத்தையும் (பிரகாசத்தையும்), உற்ற அன்பரைத் தாங்கிக் காக்கும் அழகுடைய வலிய திருவடிகளையும், அழிக்க வேண்டியவர்களைத் தேய்த்து அழித்த இடி ஒத்த பெரிய வலிய கைகளையும் உடையவனும், குற்றம் அற்ற கற்பினையும் விளக்கமான நெற்றியினையும் உடைய தெய்வயானையின் கணவனும்,

முருகனது மார்பு மாலை

(7-11 ) கடலிலே நீரை மொண்டுகொண்டதனால் நிறைவுற்றுக் கருக்கொண்ட கரிய முகில் (மேகம்) மின்னல் ஒளி பிளந்து வீசுகின்ற விண்ணிலே வளமான நீர்த்துளிகளைச் சிந்தி ஆண்டின் முதல் மழையை மிகுதியாகப் பெய்த குளிர்ந்த நறுமணமுள்ள கானகத்தில் இருட்டாகும்படி அடர்ந்துள்ள பருத்த அடிமரத்தையுடைய செங்கடம்பின் உருளை போன்ற பூக்களால் தொடுத்த குளிர்ந்த மாலை புரளுகிற மார்பை உடையவனும்,