பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றோர் முன்பகுதியில் என் அன்னையின் பெயரால் அமைந்த பள்ளியின் வளர்ச்சியில் என்னுடன் கலந்து உதவிய பல பெற்றோர்களைச் சுட்டினேன். ஒருசிலர்தம் நற்பெயர்களை யும் குறித்தேன். தொடங்கிய நாள்தொட்டு எங்கள் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து உதவியவர்களை இங்கே நினைக்காமல் இருக்க முடியாது. பள்ளியின் தொடக்கத்தில் முதல்முதலாக 21.6-68-ல் திரு. செயராமன் என்பவர் தம் மக்கள் மூவரை முதன் மூன்று மாணவராகக் கொண்டு வந்து சேர்ந்தார். அவர் வாலாஜாபாத் இந்துமத பாடசாலையின் பழைய மாணவர். நானும் அப் பள்ளியின் பழைய மாணவனன்றோ! என்னிடம் அன்பு கொண்டவர்: கட்டட ஒப்பந்தம் செய்து ஓரளவு பொருளும் ஈட்டியவர். அவர் நான் பள்ளிக்கூடம் தொடங்குகிறேன் என்றபோதே, வேறு யோசனை செய்யாது, பக்கத்திலே வளர்ந்துள்ள பெரும் பள்ளிகளையெல்லாம் நினையாது, முதல் பிள்ளைகளாகத் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து, உடனிருந்து இறைவழிபாடு எல்லாம் முடித்துச் சேர்த்தது இன்றும் என் கண்முன் நிழலாடுகின்றது. முதல் பெண் பெயர் வசந்தி' என எண்ணுகிறேன். பின் அவள் பெரியவளாக வளர்ந்து, திருமணம் செய்துகொண்டபோது நான் சென்று அருகிலிருந்து வாழ்த்தி வந்தேன். இன்று அந்த முதல் மாணவி தாயாக இருந்து குடும்ப வாழ்வில் உற்று இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இப்போது வேறு சில மாணவியரும் தத்தம் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்த்துள்ளனர். அன்றுமுதல் நாள்தோறும் வளர்ந்துவரும் பள்ளியில் பலப்பல வகையான பெற்றோர்களைக் காண முடிகின்றது.