பக்கம்:திருவடி மாலை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

திருவடி மாலை என்பது தெய்வ தோத்திரமாலை, திருவள்ளுவர் கடவுள்வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தில் தெய்வத் திருவடிகளையே போற்றுகிறார்.

"எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதல் மூலமாயிருப்பது போல, உலகு ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது" என்று குறித்தவர் அடுத்து வரும் குறளில்,

'கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்'

என்று இறைவன் திருவடி தொழுதலைச் சுட்டுகிறார். இவ்வதிகாரத்தின் பிற குறள்களிலும் அடி,தாள் என்னும் சொற்களையே குறிப்பிடுகிறார். இங்ஙனமாகவே இறைவன் திருவடி வணங்கவே கடவுள் வாழ்த்துஎன்பது பெறப்படும்.

"உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர்மலி வேணியன்
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

என்று தெய்வச்சேக்கிழார் சோதிவடிவான இறை திருவடியை முதலில் போற்றியே தம் புராணத்தைத் தொடங்குகிறார்.

திருவடிமாலை என்னும் இந்நூல் திருமாலைப் போற்றிப் புகழ்கிறது. இறைவனிடம் பக்தி செலுத்துவது ஒருபாலாக, இறைவன் அடியார்க்கு அடியன் ஆதல் வேண்டும் என்கிறார் சுந்தரர். இவர் தாம் பாடிய திருத் தொண்டத் தொகையில், தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி, ஒவ்வொரு நாயன்மாரையும் சுட்டி, அவர்க்கு அடியேன் என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/5&oldid=1318840" இலிருந்து மீள்விக்கப்பட்டது