பக்கம்:திருவடி மாலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 மகாவித்துவான் ரா. இராகவையங்கார் திருவடி மாலையின் தொடக்கத்தில் உள்ள வாழ்த்தில், 'திருவினிய பொய்கை' என்று பொய்கையாழ்வார் முதலாக 'குருகைமகிழ் மாறன் பெரிய சடகோபன்' ஆகிய குரவர்தாள் சேர்குவர் அடிமையானே' என்று குறித்தல் அவர் தம் அடியார்க்கு அடியனாகும் பத்தி நிலையைக் காட்டும்.

திருவடிமாலையில் சிலபாடல்கள் திருமால் திருவடிகளைப் போற்றுகின்றன. சட கோபரைச் சில பாடல்கள் துதிக்கின்றன. பலபாடல்கள் கிருஷ்ணாவதாரம், இராமா வதாரம், நரசிங்காவ வதாரம் முதலிய அவதாரங்கள் பற்றியவையே திருவேங்கடம், திருவரங்கம், திருமாவிருஞ்சோலை, திருப்புல்லாணி முதலிய திருப்பதிகளில் எழுந்தருளிருள்ள எம் பெருமான்களைப் பற்றியவை பல. திருமால் அருள் வேண்டும் பாடல்கள், மாயோனிடம் முறையிடும் பாடல்கள் சிற்சில, இவ்வாறு திருவடிமாலை பத்தி ரசம் கனிய அமைந்த இன்னிசைப் பாடல்களாகும்.

திருவடிமாலையின் இறுதியில் இராமநாம மகிமை உரைக்கும் 'சீராமநாமப் பாட்டு' என்னும் பகுதி உள்ளது.

கல்லாரும் கற்றாரும் கற்கும் நாமம்
     கங்கை முதல் தீர்த்த பயன் காட்டுநாமம்
வில்லாரும் வீரர் செயம் வேண்டும் நாமம்
     மெய்ம்மைக்கே பரியாயம் வேண்டும் நாமம்

என்று இவ்வாறு இராம நாமமகிமை பேசுதலை இப்பகுதியில் காணலாகும்.

இந்தப் பக்திப் பனுவல் மகாவித்துவான் வாழ்நாளிலேயே 1933ஆம் ஆண்டு முதன் முறையாக வெளியிடப் பெற்றது. 66 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் இப் பதிப்பினைத் தமிழார்வலர்கள் பெற்றுப் பயன்பெறுவார்களாக.

கவிமணி நிலையம் 28-3-96
மு.சண்முகம் பிள்ளை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/6&oldid=1318846" இலிருந்து மீள்விக்கப்பட்டது