பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

 நாள்தோறும் வழிபட்டுக் கற்றதனாலாய பயனைப் பெற்று மகிழ்ந்தார்.

செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானையே தமது வழிபடு கடவுளாகவும், முதற் குரவனாகவும் கொண்டு தமிழ் நூல்களைப் பிறரிடம் சென்று ஓதாமல் தாமே பயின்று தேனினுமினிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடும் தெய்வப்புலமை கைவரப் பெற்றார். திருஞானசம்பந்தரைத் தமது வழிபடு குருவாகவும், ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கும் தேனினுமினிய திருவாசகத்தைத் தமது வழிபாட்டு நூலாகவும் கொண்டு இறைவன் திருவருளில் திளைத்து மகிழும் செம்புலச் செல்வராகத் திகழ்ந்தார். ஆதலின் இராமலிங்கரை ஒதாதுணர்ந்த மாதவச் செல்வரெனப் போற்றுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும்.

இராமலிங்கர் தாம் ஐந்து திங்கள் நிரம்பிய குழந்தையாயிருந்த போது அவர்தம் தந்தையார், மனைவி மக்களுடன் சிதம்பரஞ் சென்று திருச்சிற்றம்பலத்தில் அருள் நடம் புரியும் கூத்தப்பெருமானை வழிபாடுசெய்து சிற்றம்பலத்தில் அருவ நிலையிலுள்ள சிதம்பர ரகசிய (திருவம்பலச் சக்கர) தரிசனத்துக்காக நின்ற சமயம் தில்லைவாழந்தணர் இரகசியத்திரையைத் துாக்கி ரகசிய தரிசனம் காட்டியபோது அனைவரும் கண்டு வணங்கின ரென்பதும் அந்நிலையில் தாயின் கையில் குழந்தையாயிருந்த இராமலிங்கரும் அத்தெய்வ அருட்காட்சியைக் காணும் உணர்வுடையராய்க் கண்டு மகிழ்ந்தாரென்பதும்

தாய்முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கித் தரிசித்தபோது