பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


அடைந்து உய்தி பெறுதற்கு அமைக்கப் பெற்றனவே என்னும் உண்மையை உடன்பட்டுப் பிணக்கின்றி இறைவனையுணர்ந்து போற்றுவார்க்குச் சிவமாநகராகிய வீடு பேற்றினை விரைவில் அடைதல் எளிதாகும்' என அறிவுறுத்துவது,

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர் நந்தி
எத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர் புகலாமே

(திரு 1568)

எனவரும் திருமந்திரமாகும். இதன்கண் 'ஒத்துணர்வார்' என்றது, சமயவேறுபாட்டினைக் கருதாமல் இறைவனால் அருளிச் செய்யப்பட்ட சமயங்கடந்த மேல்நிலையாகிய சமரசத்தினை உடன்பட்டு ஒழுகுவோராகிய சன்மார்க்கச் செல்வர்களை, இத்தகைய சமரச சன்மார்க்க நெறியே இறைவனது திருவருளைக் கூடுதற்குரிய நல்ல உபாயமாகும் என்பது,

'ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும்
உபாயம தறியாமே'

(திருவாச 431)

எனவரும் வாதவூரடிகள் வாய்மொழியால் நன்கு புலனாகும்.

அறுவகைச் சமயங்களும் இறைவனையடைதற்கு வகுத்த நெறிகளே என்பதனை அறிவுறுத்துவது:

ஒன்றது பேரூர் வழி யாறதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது வென்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே

(திருமந்திரம்-1558)

எனவரும் திருமந்திரமாகும்.