பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


'விண்ணாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்துக்
கண்ணா ரமுதுண்டார் காலம் பெற அழுதார்'

(௸ 163)

எனவும் வரும் திருப்பாடல்களில் சேக்கிழாரடிகள் தெளிவாக விளக்கியுள்ளார்,

தில்லைப் பொன்னம்பலத்திலே சோதிப்பொருளாகிய இறைவன் தனது அருளாகிய பேரொளி அண்டத்திலும் ஆருயிர்களின் அகத்திலும் அண்டத்து அப்புறத்திலும் எவ்வுலகத்திலும் விளங்கா நிற்ப ஆடியருளும் திறத்தினை 'அரியானை' எனத் தொடங்கும் பெரிய திருத்தாண்டகத்தில் 'தொல்லைத் திகழ் ஒளி' எனவும் 'சிந்தைதனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி' யெனவும். அண்டத்து அப்பால் நின்ற பேரொளி யெனவும் வரும் தொடர்களால், திருநாவுக்கரசர் விளக்கியருளியுள்ளார். இத் திருத்தாண்டகம், தில்லையம்பலத்திலே இறைவன் அருட்சோதித் தெய்வமாக ஆடல்புரியும் திறத்தினை விரித்துரைத்துள்ளமை காணலாம். இக்கருத்திலேயே,

'அளவா ஒளிவளர் தில்லை ஒருவன்'

(திருச்சிற்றம்பலக்கோவை-16)

என வாதவூரடிகளும் 'ஒளிவளர் விளக்கே’’ எனத் திருமாளிகைத் தேவரும், 'திருவளர் திருச்சிற்றம்பலம்” எனக் கருவூர்த் தேவரும், 'அலகில் சோதியன்’ எனச் சேக்கிழாரடிகளும் அம்பலக் கூத்தனை ஒளியுருவினனாகப் போற்றியுள்ளமை காணலாம்.

தில்லைச் சிற்றம்பலத்தில் திருவம்பலச்சக்கரத்தில் வைத்துப் போற்றப்பெறும் சிதம்பர ரகசிய வழிபாடு