பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248


செய்து உலகெங்கும் சென்று மன்னுயிர்களுக்கு நலம் செய்வதையே தமது கடமையாகக் கொண்டு இறவாமல் பிறவாமல் வாழ்பவர்களே சித்தர்களெனப் போற்றப் பெறுவர். தம்முள்ளத் தாமரையில் எழுந்தருளிய உயிர்க்குயிராகிய இறைவனை இடைவிடாது தியானித்துப் போற்றும் தவ யோகிகளாகிய சித்தர்கள் தமது உடம்பிற்கு அழிவின்றி நீடுவாழ்வார்கள் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகும். இடம் வரையாது நீடுவாழ்வார் என்று கூறாமல், நிலமிசை நீடு வாழ்வார் என இடத்தினை வரைந்து கூறினமையால் இங்கு நீடுவாழ்தல் என்பது அழியா உடம்போடு நிலமிசை நிலைத்து வாழ்தலாகிய மரணமிலாப் பெருவாழ்வையே குறிக்கும் எனக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

உலகத்தில் உடம்புடன் கூடிப்பிறந்தவர்கள் இறத்தலும், அவ் வுடம்பை விட்டு இறந்தவர்கள் மற்றொரு உடம்பினைப் பெற்று மீளப் பிறத்தலும் புதுமையான செய்தி அன்று; தொன்று தொட்டு நடைபெற்று வரும் உயிர்களின் பொதுவாழ்க்கை முறையே ஆகும். இம் முறையினை 'உயிர் போகு பொது நெறி' என்பர் இளங்கோவடிகள். இவ் உண்மையினை, 'பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை' (சிலப்பதிகாரம் 30-ஆம் காதை 139-140) என மாடல மறையோன் கூற்றாக இளங்கோ வடிகள் புலப்படுத்தியுள்ளார்.

ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும் எனவும், அதன் பின்பு பிறப்பு வருதல் உறங்கி விழித்தலோடு ஒக்கும் எனவும் இவ்வாறு காரண காரியத் தொடர்ச்சியாய்ப் பிறப்பும் இறப்பும் கரையின்றித் தொடர்ந்து வருதலால் பிறவியைப் பெருங்கடல் எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளார். இவ்வாறு நிலையின்றி