பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


வினனாய் முற்று முனர்ந்து யாண்டும் நீக்கமற நிறைந்து முழுமுதல்வனாய் விளங்கி நிற்ப, உலகஉயிர்கள் யாவும் அம்முதல்வனது ஆணைக்குள் அடங்கித் தத்தம் வினைக்கீடாக உலகு, உடல், கருவி, நுகர்வு ஆகியவற்றைப் பெற்றுத் திரிபுடையனவாய் நிலவா நின்றன என்பதாம். எழுத்துக்கள் எல்லாவற்றிலும் நிறைந்து அவற்றிற் கெல்லாம் முதலாய் நிற்கும் பொது இயல்பு பற்றி அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறினர். ஆயினும், அப்பரம்பொருள் அறிவே உருவாய் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து எப்பொருட்கும் ஆதாரமாய் நிற்கும் முழு முதலாகவும், உலகப் பொருள் அனைத்தினையும் தனக்கு உடைமையாகக் கொண்ட தன்னேரில்லாத் தலைவனாகவும் திகழ்தலால் உண்மையாக ஆராய்ந்து பார்க்குங்கால், அம்முதல்வன் தன் உடைமைப் பொருள்களாகிய பசுபாசங்கள் ஒன்றினோடும் உவமிக்கப் படுபவன் அல்லன் என்பது திருவள்ளுவர் கருத்தாகும். இவ்வுண்மையை அறிவுறுத்துவார், 'அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து' என்றார் உமாபதி சிவனார் 'அகர உயிர் போல்’ என்பது 'அகர முதல' என்னும் முதற்குறளையும் அறிவாகி என்பது இரண்டாங்குறளில் உள்ள 'வாலறிவன்’ என்ற தொடரையும் நிகரில் இறை என்பது தனக்கு உவமை இல்லாதான் (7) என்னும் தொடரையும் எங்கும் நிறைந்து நிற்கும் (5) என்பது இறைவன்’ (10) என்னும் பெயர்க்காரணத்தையும் விளக்கும் முறையில் அமைந்துள்ளமை காணலாம். எழுத்துக்கள் உயிர், மெய் என இரு பகுதியனவாய் அகரத்தைத் தமக்கு முதலாகக் கொண்டு இருத்தல் போன்று, உலகமும் உணர்வுடைய உயிர்கள், உணர்வில்லாத பொருள்கள் என இரு பகுதியை உடையதாய் ஆதிபகவனைத் தனக்கு முதலாக உடையது என்று அறிவுறுத்துவது திருக்குறளின் முதற்குறளாகும். உயிரெழுத்து