பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

359


யினை இன்று அறிந்து கொண்டேன். சிதாகாசப் பெருவெளியில் ஆடல்புரியும் இறைவர் என் உயிரிற் கலந்த பொழுது வினைத்தொடர்பு அற்று யான் பெற்ற இன்பத்தினை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் யான் நுகரும் பேரானந்தமாகிய பெரும்போகம் அவ்வப்போது பொங்கியெழுந்து என்னை விழுங்கித் தன் அகத்திட்டுக் கொண்டதனைக் காண்பாயாக' எனத் தலைவி தோழியை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,

கண்கலந்த கணவர் எனைக் கைகலந்த தருணம்
     கண்டறியேன் என்னையும் என்கரணங்கள் தனையும்
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்தனில் ஓர்
     இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
     வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைந்திடுந்தோ றெல்லாம்
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
     துற்றதென எனைவிழுங்கக் கற்றது காண் தோழி

(5721)

எனவரும் திருவருட்பாவாகும். இதன் கண் 'உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போது உற்றதென எனை விழுங்கக் கற்றதுகாண்' எனவரும் தொடர் 'யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலை நின்றது தற்பரமே' (கந்தரநுபூதி 28) எனவரும் அருணகிரிநாதர் அநுபவ மொழியை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம்.

ஆருயிர்த்தலைவனாகிய இறைவனையணைந்த தலைவி, தன்னுடம்பு முழுதும் பச்சைக் கற்பூர நறுமணம் இடைவிடாது வீசும் இயல்பினையும் இத்தகைய நறுமணம்