பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366


மக்கள் மேற்கொள்ளும் நல்லறச் செயல்களிலும் அறிவுடைய அம்முதல்வரைப் போற்றிக் கூடி ஞானப் பொருளாயுள்ள சான்றோர்கள் பலர் கண்டு மகிழும் சமரச சன்மார்க்க சங்கத்திலும், என் தோழியாகிய நீ சிறிது நேரம் தங்கியிருப்பாயானால் என் ஆருயிர் நாயகரை அங்கே காணலாம். பசி நோயினால் துன்புற்று வரும் ஏழைகட்கு அன்னம் பாலித்தல் முதலிய அறச் செயல்களிலும் மன்னுயிர்கள் உய்ய அம்முதல்வனை நினைந்து போற்றும் தியான நிலையிலும் அவ்விறைவர் பகற்பொழுதிலேயே எல்லோரும் காண வெளிப்பட்டு என் உயிரிற் கலந்து இன்பம் நல்குந் திறத்தினை நீ நேரிற்கண்டுணர்வாய் எனத் தலைவி தன் தோழியொடு உரையாடியதாக அமைந்தது,

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
     வழக்கம் அதுகண்டனம் நீ மணவாளருடனே
காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
     கண்டிலன் ஈததிசயம்என் றுரையேல் என்தோழி
ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
     உழல்கின்றாய் ஆகலில் இவ்வளவறியாய் தருமச்
சாலையிலே சமரசசன்மார்க்க சங்கந்தனிலே
     சற்றிருந்தாய் எனில் இதனை உற்றுணர்வாய் காணே.

(5785)

எனவரும் அனுபவமாலை 72-ஆம் பாடலாகும். இப் பாடலில் தருமச்சாலையிலே சற்றிருந்தாயெனில் இதனை உற்றுணர்வாய் எனத் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள். இத்தொடரில் இதனை என்றது இறைவனாகிய தலைவன் காலைப்பொழுதிலேயே பலருங்காணத் தன் ஆருயிர்த் தலைவியோடு கலந்து இன்பம் நல்குதலை. இவ்வுண்மையினை வள்ளலார் தாம் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலில்,