பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367


"ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரணமுதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுதும் சில் என்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விள்ங்குகின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தி இன்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்களாதலால் அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும், கடவுளின் இன்பத்தை அநுபவிக்கின்ற முத்தர் என்றும் அறியவேண்டும்" எனத் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். தம் பசிப்பிணி நீங்க ஆகாரத்தைப்பெற்று மகிழ்ந்த ஏழை எளியவர்களின் முகமலர்ச்சியிலே பலரும் காணவெளிப்பட்டுத் தோன்றும் ஆன்ம நாயகனாகிய இறைவன், அன்னமளித்து ஏழைகளின் முகமலர்ச்சி கண்டு மகிழும் ஆருயிர்த் தலைவியொடு கலந்து ஈறிலாப் பேரின்பத்தை நல்கி அருளுவான் என்னும் உண்மை மேற்குறித்த வள்ளலார் வாய்மொழியில் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இனி சன்மார்க்க சங்கந்தனிலே சற்றிருந்தால் காணலாம், என்பது,

எத்துனையும் பேதமுறா தெவ்வுயிரும்
     தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமையுடையவரா யுவக்கின்றார்
     யாவர் அவருளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
     இடமென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
     சிந்தைமிக விழைந்த தாலோ.

(5297)

எனவரும் பாடலில் வள்ளலார் குறித்துள்ளமையால் நன்கு புலனாகும். சிறிதும் மன்னுயிர்களிடத்திலே வேறு