பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

எல்லாம் வல்ல இறைவனை அம்மையுடன் அமர்ந்த அப்பனாக (மாதொருபாகனாக)க் கருதிப் போற்றும் வழிபாட்டுமுறை தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நிலை பெற்று வருவதாகும். இத்தகைய மாதொரு பாகர் வழிபாடு

'நீலமேனி வாலிழைபாகத்து

ஒருவன்.” (ஐங்குறு நூறு-கடவுள் வாழ்த்து)

எனவும்,

"பெண்ணுரு வொருதிற னாகின்று அவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினும் கரக்கும்"

(புறநானூறு கடவுள் வாழ்த்து)

எனவும்,

"ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே"

(அகநானூறு- கடவுள் வாழ்த்து)

எனவும் வரும் சங்கச்செய்யுட்களில் இடம் பெற்றுள்ளமை காணலாம். முழுமுதற் பொருள் அம்மையப்பராகத் திகழும் தொன்மைக் கோலத்தினை

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக்

கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி.

எனவரும் திருவாசகத் திருப்பாடலால் மணிவாசகப்பெருமான் சொல்லோவியம் செய்து காட்டிய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும்.