பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

375


சுதந்தரத்தினை அடைதற்குரிய உபாயமாகும் என்பது இவ்வெண்பாவினால் அறிவுறுத்தப்பெற்றது.

இதுவே அருட்பிரகாச வள்ளலாரது உறுதியான கோட்பாடாகும். இவ்வுண்மை, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வள்ளலார் வேண்டிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் சத்திய விண்ணப்பத்தால் இனிது புலனாதல் காணலாம்.

'உத்தரஞானசித்திபுரம் என்றும், உத்தரஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில் இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம்வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய அருட் பெருஞ்சோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகிற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்:

இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடைத்தாகிய தேகத்தைப் பெற்ற யான், இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டுமென்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.