பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

385


அருளிய தேவார திருவாசகமாகிய அருட்பாடல்களை இடைவிடாது ஓதி நெஞ்சம்நெக்குருகிய அருட்பிரகாச வள்ளலார், அவ்வருளாசிரியர் அறிவுறுத்திய நெறியில் நின்று எல்லாம் வல்ல இறைவனைப்பாடிப் போற்றிய பனுவல் திருவருட்பாவாதலின், அப்பாடல்கள் யாவும் இறைவன் அருள்வழிநின்று முன்னோர் பாடிய திருமுறைகளின் விரிவுரையாகவும் நுண்பொருள் விளக்கமாகவும் அமைந்துள்ளமை காணலாம். அருட்பிரகாச வள்ளலார் சமய குரவர் முதலிய திருமுறையாசிரியர்களது வரலாற்றுச் செய்திகளையும் திருமுறைப்பாடல்களின் சொற்பொருள் அமைப்பினையும், தாம் பாடிய திருவருட்பாப் பனுவல்களிற் பலவிடங்களிலும், குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இவற்றைக் கூர்ந்து நோக்குங்கால் திருமுறைகளில் இராமலிங்கவள்ளலார் கொண்டுள்ள அளப்பரும் ஈடுபாடும் அத்திருமுறைகளாற் பெற்ற அருளனுபவமும் இனிது புலனாகும்.

தமிழகம் சங்க காலத்துக்குப்பின் அயலவர் ஆட்சியுட்பட்டுத் தனக்குள்ள, தெய்வங் கொள்கை, தமிழ் வளர்ச்சி, தமிழர் நாகரிகம் முதலிய தன் தொன்மை நலங்களிற் சிதைவுற்ற பொழுது, அச்சிதைவுகளை நீக்கித் தமிழ் நாட்டு அரசியல் உரிமையும், தமிழ்மக்களது வாழ்வியலும், மொழியுணர்வும், கலைவளமும் பண்டுபோல் மீண்டும் சிறப்புற்று விளங்க இறைவன் அருளால் தோன்றித் தெய்வத்தமிழ் பரப்பிய செம்புலச் செல்வர்கள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மானிக்கவாசகர் முதலிய திருமுறை ஆசிரியர்கள் ஆவர்.

பண்ணேறும் மொழியடியாராகிய தேவார ஆசிரியர்கள் மூவரும், தமிழகத்தில் ஊர் தோறும் சென்று தமிழ் மக்களை ஒன்றுகூட்டித் திருக்கோயில் வழிபாட்டில்