பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவடிப் புகழ்ச்சி

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோ அறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிநடந்து
சும்மா இருக்கும் சுகம்.

1. தோற்றுவாய்

“திருவடிப்புகழ்ச்சி” என்ற தலைப்பில் பாடப்பெற்ற இது ஒரு பெரிய ஆசிரிய விருத்தப்பாவாகும். இது அடியொன்றுக்கு 192 சீர்களையுடையதாய் நான்கடிகளால் ஆன கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். (ஒவ்வொரு அடியும், வரியொன்றுக்கு 6 சீர்கள் கொண்ட 32 வரிகளையுடையது. முதலடி “பரசிவம்”, இரண்டாவது அடி “தரமிகும்”, மூன்றாவது அடி “மரபுறு” நான்காவது அடி “இரவுறும்” என்று இப்பாடலில் தொடங்கும். முதலடியில் காணும் 32 வரிகளும் பகரத்தையும், இரண்டாவது அடியில் காணும் 32 வரிகளும் தகரசகரங்களையும், மூன்றாவது அடியில் காணும் 32 வரிகளும் மகரவகரங்களையும், நான்காவது அடி 32 வரிகளும் இ ஈ எ ஏ என்ற எழுத்துக்களையும் மோனை எழுத்துக்களாகக் கொண்டுள்ளன). இது மிக நீண்டதொரு திருப்பாடலாகையால் ஒரு தனி நூலாகவே கருதத்தக்க பெருமையுடையது. திருவருட்பா மூன்றாம் திருமுறையில் திருவடிப் புகழ்ச்சி முதலாகத் திருவருள் முறையீடு இறுதியாகவுள்ள ஆறு நூல்களும், வள்ளற்பெருமான் சென்னையில் வதிந்த காலத்தில், பிற்பகுதியில் பாடப்பெற்றவை என்று சொல்லப்படுகிறது.[1] இந்நூல் பரசிவத்தின் ஆன்மாக்களின் மலவிருள் அகற்றும் பொருள் சேர் புகழைப் பலவாறு நன்கியம்புவது.

2. தேவார மூவரும் திருவடிப் புகழ்ச்சியும்

திருநெறிய தெய்வத்தமிழ் ஆகிய தேவாரம் அருளிய மூவர் பெருமக்களும், சிவ பெருமானுடைய திருவடிப் பெருமையைப் பல திருப்பாடல்களில் போற்றிப் பரவியுள்ளனர். . சிறப்பாகத் திருநாவுக்கரசர், “மன்னு மலைமகள் கையால் வருடின” என்று தொடங்கும் இன்னம்பர்த் திருவிருத்தப்பதிகத்திலும், “சிந்திப் பரியன” என்று தொடங்கும் திருவையாற்றுத் திருப்பதிகம் (இருபது) திருப்பாடல்களிலும், திருவதிகை வீரட்டானத்துப்


  1. திருவருட்பா - முதல் ஐந்து திருமுறைகள் - இரண்டாம் பதிப்பு 1981 - முன்னுரை, ஊரன் அடிகள், பக்கம் 16.