பக்கம்:திருவருட் பயன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பட்டுப் பரதந்திரமுடையனவாய் நிலவுதல் போல, ஆதிபகவனாகிய இறைவன் இயற்கையுணர்வினானே முற்றுமுணர்ந்து யாண்டும் நிறைந்து நின்று முழுமுதல்வனாய் விளங்கி நிற்ப, உலகனைத்தும் அவனது ஆணையான் வியாபிக்கப்பட்டுப் பர தந்திரமுற்று வினைக்கீடாக உலகு உடல் கருவி நுகர்வினைப் பெற்று நிலவாநின்றன என்பது கருத்து. முதலாய் என்னும் உவமையடை பொருளினும், நிறைந்து என்னும் பொருளடை உவமையினும் கூட்டியுரைத்தற்குரியன. இங்ஙனம் எழுத்துக்களெல்லாவற்றினும் நிறைந்து அவைதமக்கு முதலாய் நிற்கும் பொதுவியல்புபற்றி ஆதிபகவனாகிய இறைவனை அகரத்தோடு ஒப்பித்தருளினும் அப்பரம்பொருள், அறிவே உருவாய் யாங்கணும் நீக்கமற நிறைந்து எல்லாப்பொருட்கும் ஆதாரமாய் நிற்கும் முழுமுதல்வனும் உடையானும் ஆதலால், உண்மையான் நோக்கும்வழி அவன் தன் உடைப்பொருளாகிய பசு பாசங்களுள் ஒன்றனோடும் உவமிக்கப்படான் என்பதே தெய்வப்புலவராகிய நாயனாருக்குக் கருத்தென்பது அறிவுறுத்துவார், 'அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து என்றார், அகரவுயிர்போல்’ என்பது, 'அகரமுதல' என்னும் முதற் குறளையும், 'அறிவாகி' என்பது வாலறிவன் என்னும் இரண்டாங் குறளின் தொடரையும், நிகரிலிறை” என்பது தனக்குவமையில்லாதான் (திருக்குறள்-7) என்னும் தொடரையும், “எங்கும் நிறைந்து நிற்கும்’ என்பது இறைவன்' (திருக்குறள்-5, 10) என்னும் பெயர்ப்பொருளையும் விளக்கும் முறையில் அமைந்திருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

எழுத்துக்கள் உயிர், மெய் என இருதிறத்தனவாய் அகரமுதல் ஆதல் போன்று, உலகமும் உணர்வுடைய உயிர்கள், உணர்வில்லாத ஏனைய உயிரல்பொருள்கள் என இருதிறத்தினதாய் ஆதிபகவனை முதல்வனாகவுடையது என்றவாறு. உயிரெழுத்து சீவான்மாவுக்கும், மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும், அகரம் ஆதிபகவனாகிய இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/30&oldid=514311" இலிருந்து மீள்விக்கப்பட்டது