பக்கம்:திருவருட் பயன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

பாவை எனவும் கணவர் எனவும் கூட்டம் பற்றி உருவகஞ்செய்ததன்றி ஆண்குறி பெண்குறி அவ்விடத் தில்லையெனக் கொள்க. என்றும் என்றதனால் கேவல சகல சுத்தம் மூன்றிலும் என்பதூஉம் பெற்றாம். சிறப்பும்மை இரண்டனுள் பின்னது இழிவு குறித்து நின்றது; இடை நின்ற உம்மை முற்றும்மை.

இதனால் ஆணவத்தினது தன்மை கூறப்பட்டது.

விளக்கம்: இருள்மலம் ஒன்றே எண்ணிறந்த ஆன்மாக் களையும் பற்றி மறைத்து நிற்குமாறு கூறுகின்றது.

பலர் என்றது எண்ணிலவாகிய உயிர்களை. இருட்பாவை என்றது, இருள்மலமாகிய ஆணவத்தை. கூடி நின்று மயக்குதல் பற்றி இருளைப் பெண்ணாகவும், கலந்து ஒன்றாய் மயங்குதல் பற்றி உயிர்களை ஆணாகவும் உருவகஞ் செய்தார். மோகமிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கும் மூல ஆணவம் (சிவப்-32) என இந்நூலாசிரியர் முன்னர்க் கூறியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும். கணவர்க்கும் என நிரம்ப அழகிய தேசிகரும், கணவற்கும் எனச் சிந்தனையுரையாசிரியரும் பாடங்கொண்டு பொருள் வரைந்துள்ளார்கள், கற்பு என்பது, ஆணவமலத்திற்குக் கொள்ளுங்கால் நியமம் என்ற பொருளையும், பெண்ணுக்குக் கொள்ளுங்கால் கற்பின்மை என்ற குறிப்புப்பொருளையும் தருவதாகும்.

புறத்தே தோன்றும் இருளானது, தான் ஒன்றாயிருந்தும் பல கண்களையும் மறைத்தாற்போல, ஆணவமலம் தான் ஒன்றாயிருந்தும் எண்ணிறந்த ஆன்மாக்களையும் கூடி நின்று மறைக்கும் என்பதாம். ஆணவம் உயிரறிவை மறைத்துள்ளது என்பது உண்மையாயின், அதன் தன்மையினை விளங்க அறிவுறுத்தல் வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/80&oldid=515357" இலிருந்து மீள்விக்கப்பட்டது