பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனியவை கூறல்

இ-ள்:- நயன் ஈன்று-பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பயன் ஈன்று -பொருளையும் பயந்து, நன்றி பயக்கும்-அறத்தினையும் பயக்கும், பண்பின் தலைப்பிரியா சொல்-குணத்தினின்று நீங்காத சொல். [குணம் - இனிமை.]

இஃது, இன்சொல் நட்பையும் பொருளையும் அறத்தையும் பயக்கு மென்றது. ௨௫௭.

ன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இ-ள்:- செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் இன்சொலால்-(இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது) உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொல்லாதலானே, ஈரம் அளைஇ படிறு இலவாம்-(அவை) அருளோடு பொருந்திக் குற்றம் இலவாம்.

இஃது, ஒருவனைக் கடிந்து சொல்ல வேண்டும் இடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டு மென்றது. ௨௫௮.

ன்சொல் இனிதீன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இ-ள்:- இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்-(பிறனொருவன்) இனியவாகச் சொல்லும் சொற்கள் தனக்கு இன்பத்தைப் பயத்தலைக் காண்பான், வன்சொல் வழங்குவது எவனோ-(அவற்றிற்கு மறுதலையாகிய) வன்சொற்களை வழங்குவது எப்பயனை நோக்கியோ? [கொல் - அசை.]

இது, வன்சொல் சொல்லுதல் மடமை யென்றது. ௨௫௯.

னிய உளவாக இன்னாத கூறல்,
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

௯௩