பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

முயறலுமாம். [அடக்கமடைந்த பின்னரே தவம் செய்ய முடியுமாதலான் இஃது அதன்பின் கூறப்பட்டது.]

வம்செய்வார் தம்கருமம் செய்வார்;மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையிற் பட்டு.

இ-ள்:- தம் கருமம் செய்வார் தவம் செய்வாரே - தம் கருமம் செய்வார் தவம் செய்வாரே; அல்லார் ஆசையில் பட்டு அவம் செய்வார்-அஃதல்லாத செய்வா ரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றனர்.

[மற்று என்பது அசை. ஏகாரம் தொக்கது.]

இது, தவம் பண்ண வேண்டு மென்றது. ௨௭௧.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்?

இ-ள்:- துறந்தார்க்கு துப்புரவு வேண்டி-துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டி, மற்றையவர்கள் தவம் மறந்தார் கொல்- இல்வாழ்வார் தவம் செய்தலைத் தவிர்ந்தா ராயினரோ?

இது தானத்தினும் தவம் மிகுதியுடைத் தென்றது. ௨௭௨.

வமும் தவமுடையார்க் காகும்; அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

இ-ள்:- தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-தவம் செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அஃது இலார் அதனை மேற்கொள்வது அவம்-நல்வினை யில்லாதார் தவத்தை மேற்கொள்வது பயனில்லை.

இது, முன் அறம் செய்யார்க்குத் தவம் வராது,, வரினும் தப்பு மென்றது. ௨௭௩.

௯௮