பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

ஃகி அகன்ற அறிவென்னாம், யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்?

இ-ள்:- அஃகி அகன்ற அறிவு என் ஆம்-நுண்ணிதாகப் பரந்த அறிவுடையனா யிருத்தலால் யாது பயன் ஆகும், வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் ஈரமில்லாதன செய்வானாயின்?

[அறிவு என்பது அறிவுடையனாயிருக்கும் தன்மையைக் குறித்து நின்றது. ஈரமில்லாதன-அன்பில்லாத செயல்கள்.]

இஃது, அறிவுடையார் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௨.

லமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

இ-ள்:- இலம் என்று வெஃகுதல் செய்யார்-(யாம்) வறியம் என்று பிறர் பொருளை விரும்புதல் செய்யார், புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் -ஐம்புலனையும் வென்ற புன்மை இல்லாத தெளிவை யுடையார்.

[ஐம்புலன்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அவற்றை வெல்லலாவது, அவற்றைப் பற்றி எழும் அவாவினை ஒழித்தல்.]

இது, துறந்தார் வெஃகுதல் செய்யாரென்றது. ௩0௩.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

இ-ள்:- சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-சிற்றின்பத்தை நல்கும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார், மற்று இன்பம் வேண்டு பவர்-பேரின்பமாகிய வீடு பேற்றைக் காமிப்பவர்.

௧௧0