பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்.

நீரின் றமையா துலகெனின், யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு,

இ-ள்:- நீர் இன்று உலகு அமையாது எனின் - நீரையின்றி உலகம் அமையா தாயின், யார் யார்க்கும் வான் இன்று ஒழுக்கு அமையாது - யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.

ஒழுக்கம் - விரதம். [அமைதல் - நிரம்புதல்.]

இஃது, ஒழுக்கம் கெடு மென்றது. இவை மூன்றினாலும் நாலறமும் கெடு மென்று கூறினார். ௧௩.

விண்ணின்று பொய்ப்பின், விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி,

இ-ள்:- விண் நின்று பொய்ப்பின் - வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரி நீர் வியன் உலகத்துள் - விரிந்த நீரினையுடைய அகன்ற உலகத்திடத்தே, பசி நின்று உடற்றும் - பசியானது நின்று வருத்தாநிற்கும் (எல்லா உயிர்களையும்).

பொய்த்தல் - தன் தொழில் மறுத்தல். [நிலைநிற்க-நிலையாக.]

இது, பசியென்று பொதுப்படக் கூறியவதனால், மக்களும் விலங்குகளும் பொருளையும் காமத்தையும் துய்க்கலாற்றாது துன்பமுறு மென்று கூறிற்று. ௧௪.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

இ-ள்:- விசும்பின் துளி வீழின் அல்லால் - வானின்று துளி வீழின் அல்லது, ஆங்கு பசும் புல் தலை காண்பு அரிது - அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றத்தையும் காண்டல் அரிது.

'ஆங்கு' என்பதனை அசையாக்கினும் அமையும். [மற்று--அசை.]

இஃது, ஓரறிவுயிரும் கெடு மென்றது. ௧௫.